சென்னை: சென்னை பெருநகர ஆணையரகத்திற்கு ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2021-22ம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்துள்ள பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும், சுமார் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக புதிய ரோந்து வாகனங்களும் வாங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் மூலம் நாள்தோறும் பெறப்படும் அவசர சேவை அழைப்புகளுக்கு விரைந்து சேவை வழங்கிடவும் மற்றும் சேவையை பலப்படுத்தும் விதமாகவும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 46 ரோந்து வாகனங்களும், சென்னை பெருநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திடவும், அவசர ஊர்திகளின் பயன்பாடு மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தினை விரைவுப்படுத்திடவும் சுமார் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய போக்குவரத்து ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 47 போக்குவரத்து ரோந்து வாகனங்களும் என மொத்தம் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை முதல்வர் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும், போக்குவரத்து காவல் மூலம் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தமிமிழக அரசு தெரிவித்துள்ளது.