தமிழகம்

ஊட்டச்சத்து பெட்டகம் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டு: பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தாய்-சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து, அதிமுக ஆட்சியில் கர்ப்பிணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் திட்டத்தில் ஊட்டச்சத்து பவுடரை ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யாமல், தனியார் நிறுவனத்தில் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், இரும்புச் சத்து மருந்தையும் தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றும்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோர் மறுப்பும், விளக்கமும் அளித்தனர்.

இந்தச் சூழலில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வணங்காமுடி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் பி.கந்தசாமியிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அதில், முறைகேடுகள் தொடர்பாக விரிவாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்படி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை சந்தித்து, அம்மா ஹெல்த் கிட் முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்தோம்.

பாலூட்டும் பெண்களுக்கு 8 வகையான ஊட்டச்சத்துப் பொருட்கள் கொண்ட 23 லட்சம் நலப் பெட்டகம் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், இவற்றை ஆவின் நிறுவனத்திடம் வாங்காமல், தனியாரிடம் வாங்கியுள்ளனர். இதில் 50 சதவீதம் விலை வித்தியாசம் உள்ளது.

எனவே, இந்த முறைகேட்டைக் கண்டுபிடித்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளோம். இது தொடர்பான விசாரணையின்போது, உரிய ஆதாரங்கள் அளிக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT