சென்னை: உள்நோக்கத்துடன், ஆதாரமின்றிப் பேசினால் வழக்குத் தொடரப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் சு.முத்துசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வீட்டுமனை, கட்டிடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவற்கான, அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மே 10-ம் தேதி முதல் கடந்த 5-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் 97 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கட்டிட அனுமதியை ஆன்லைன் மூலம் வழங்கும் வசதி தற்போது உள்ளது.நில வகை மாற்றம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி பெறும் வசதி 2 மாதங்களில் ஏற்படுத்தித் தரப்படும்.
நகர ஊரமைப்பில், நில வகைமாற்றம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் அமல்படுத்தப்படும். அடுத்த 2 மாதங்களில் கட்டிட அனுமதிக்கும் இந்த முறை பின்பற்றப்படும்.
நகர ஊரமைப்புத் துறையில் 32 சதவீதம், சிஎம்டிஏவில் 37 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூன்று மாதங்களில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லே-அவுட் அனுமதி சுலபம்
பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி பதவி, கடந்த 1978-ம் ஆண்டில் இருந்தே செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு, 125 ஏக்கர் நிலத்துக்கு8 நாட்களில் அனுமதி அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுவது குறித்து கேட்கிறீர்கள்.
அரசின் அனுமதியைப் பொறுத்தவரை, நில வகை மாற்றம், லே-அவுட், கட்டிடம் என தனித் தனியாக வழங்கப்படுகிறது. ஏற்கெனவே நில மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், லே-அவுட்டுக்கு அனுமதி அளிப்பது மிகவும்சுலபம். கட்டிடத்தைப் பொறுத்தவரை 24 துறைகளில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
கோவையில் சிவமாணிக்கம் என்பவர் 2019 டிசம்பர் 12-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனுமதி, கடந்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஜி-ஸ்கொயருக்கு என்ன சம்பந்தம் என்பது எங்களுக்குத் தெரியாது. சிவமாணிக்கத்திடம் ஜி-ஸ்கொயர் வாங்கியிருக்காலாம். ஆனால், அதுகுறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை.
இந்த திட்டத்துக்கான அனுமதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. மனைப் பிரிவுக்கான அனுமதியும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அனுமதியும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
விதிகளின்படிதான் அனுமதி
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் 7.47 ஏக்கர் மனைப் பிரிவுக்கு, மாவட்ட அளவிலேயே ஒரு மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்வகணபதி என்பவர் பெயரில் 89 சென்ட் நிலத்துக்கான அனுமதி, விண்ணப்பித்த 5 மாதங்கள் கழித்து வழங்கப்பட்டுள்ளது. சங்கர் என்பவர் பெயரில் 2.31 ஏக்கர் நிலத்துக்கு 176 நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின்படிதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜி-ஸ்கொயர் பெயரில் எந்த அனுமதிக்கான விண்ணப்பமும் சிஎம்டிஏ-வுக்கு வரவில்லை. மாநகராட்சிக்குத்தான் வந்துள்ளது. ஜி-ஸ்கொயர் தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது தவறானக் குற்றச்சாட்டு.
கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் செப்டம்பர் மாதம் முடிவடையும்.
பாஜக தலைவர் அண்ணாமலை, சரியான ஆதரங்களோடு பேசினால்நல்லது. உரிய விவரங்களை அளித்தால், திருத்திக்கொள்ளத் தயார். ஆனால், உள்நோக்கத்தோடு, தொடர்ந்து தவறானக் குற்றச்சாட்டுகளை எழுப்பினால், அவர்மீது வழக்குத் தொடரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.