தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காய்ச்சல் பாதிப்பால் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். அங்கு சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் முகாமிட்டு, காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர் காய்ச்சல் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனி என்பவரின் மகள் சுப்ரியா(7) நேற்று முன்தினம் இரவும், சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா(6) நேற்று காலையிலும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா கூறும்போது, “காசிநாதபுரத்தில் பலருக்குஉடல்நிலை பாதிப்பு இருப்பதுதெரியவந்ததால் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.
உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்றுஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா என்று ஆய்வுசெய்து, மருந்து ஊற்றப்படுகிறது. பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.