கோத்தகிரி: கோத்தகிரி அருகே வாகப்பனை கிராமத்துக்கு செல்லும் பாதையில் உள்ள பாறையால் வாகனங்களில் செல்ல முடியாத நிலையுள்ளது. இதனால், 8 கிலோ மீட்டர் தொலைவுநடந்தே செல்ல வேண்டிய நிலையில் பழங்குடியினர் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரிஊராட்சி ஒன்றியம் கெங்கரை ஊராட்சியில் உள்ள குக்கிராமம்தான் நட்டக்கல். இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் காட்டுப்பாதையில் பயணித்தால், வாகப்பனை என்ற பழங்குடியினர் கிராமத்துக்கு செல்லலாம். இக்கிராமத்துக்கு சென்றுவர சாலை வசதி இல்லாததால், பல கிலோ மீட்டர் தூரம் நடந்தால்தான் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை செய்ய முடியும் என்ற நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.
தடையாக உள்ள பாறை
நட்டக்கல் கிராமத்தின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தோடு வாகப்பனை கிராமத்தை இணைக்கும் சிமென்ட் சாலை உள்ளது. அந்த சாலையின் நடுவில்30 மீட்டருக்கு ஒரு பாறை தடையாகஉள்ளது.
பேருந்து நிறுத்தம் வரை சாலை இருந்தாலும், இப்பாறையால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. இப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகளின் நலன்கருதி நடைபாதையில் உள்ள பாறையை உடைத்து சாலையை முழுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கெங்கரை ஊராட்சித் தலைவர் முருகன் கூறும்போது, ‘‘இந்த சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் அந்தப் பாறையை உடைக்கவும், சாலை அமைக்கவும் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும். வனத்துறையிடம் அனுமதி பெறுவது சிக்கல் நிறைந்த செயல்பாடாக உள்ளது.
இந்த பாறையை உடைத்து சாலையை இணைத்தால்தான் இக்கிராமத்துக்கு சிறியரக வாகனங்களாவது விடமுடியும். சாலை வசதி இல்லாததால் இங்கு வசிக்கும் சுமார் 30 குழந்தைகள், தங்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது’’ என்றார்.