சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கால்வாய்கள், கூவம், அடையாறு ஆகியஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய்உள்ளன. 30 கால்வாய்கள் தவிர மற்ற நீர்வழித் தடங்கள் அனைத்தும் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இவற்றில் மிதக்கும் ஆகாயத் தாமரை செடிகள் கொசுக்கள் உற்பத்திக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதனால் மாநகரம் முழுவதும் கொசுத் தொல்லை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மிதக்கும் கழிவுகள், ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணிகள் ஆண்டுமுழுவதும் மாநகராட்சி சார்பில்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக இயந்திரங்களையும் மாநகராட்சி கொள்முதல் செய்து, பயன்படுத்தி வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் நீர் வரத்து இருந்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டைகூவம் ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அப்பணிகளை துணை மேயர் மு.மகேஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது மாநகரம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைசெடிகளை விரைவாக அகற்றுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சியின் ராயபுரம் மண்டல அலுவலர் ஜி.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.