தமிழகம்

குறும்படம் என தவறாக நினைத்து அதிமுக விளம்பரத்தில் நடித்து விட்டேன்: திமுக விளம்பரத்திலும் தோன்றும் கஸ்தூரி பாட்டி விளக்கம்

செய்திப்பிரிவு

குறும்படம் என நினைத்து அதிமுக தேர்தல் பிரச்சார விளம்பரத்தில் நடித்து விட்டதாக அதிமுக, திமுக விளம்பரத்தில் நடித்த கஸ்தூரி பாட்டி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும், திமுகவும் போட்டிபோட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகின்றன. நிமிடத்துக்கு நிமிடம் இரு கட்சிகளின் பிரச்சார விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

‘‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம் புரட்சித் தலைவி அம்மாதான்.’’ என அதிமுக விளம்பரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம், ‘‘வானத்துல பறக்கறவங்களுக்கு நம்ம பிரச்சினை எப்படித் தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா…’’ என்ற விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நிமிடத்துக்கு நிமிடம் மாறிமாறி ஒளிபரப்பாகும் இந்த இரு விளம்பரங்களும் தமிழகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாகி விட்டது. காரணம் இந்த இரு விளம்பரங்களிலும் நடித்தது கஸ்தூரி பாட்டி என்கிற ஒரே நபர்.

இது தொடர்பாக கஸ்தூரி பாட்டி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சினிமாவிலும் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறேன். இப்போது குறும்படங்களிலும் நடித்து வருகிறேன். ஏஜென்ட் அழைத்ததால் குறும்படம் என நினைத்து அதிமுக விளம்பரத்தில் நடித்து விட்டேன்.

சில நாட்களில் மீண்டும் நடிக்க ஏஜென்ட் அழைத்தார். அது விளம்பரம் என்பது தெரியும். ஆனால் கட்சி விளம்பரம் என்று தெரியாது.

திமுக விளம்பரத்தில் கடைசியில் ‘போதும்மா..’ என்று சொல்வேன். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் அதனைச் சொல்லி கிண்டல் செய்கிறார்கள். இதனால் சில நாள்களாக வேலைக்கே செல்ல முடியவில்லை.

நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. ஏஜென்ட் சொன்னதை நம்பி நடித்து விட்டேன். அதிமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ. 1,500-ம், திமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ.1,000-ம் கொடுத்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது, ‘யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார் கஸ்தூரி பாட்டி.

SCROLL FOR NEXT