திருச்சி: பச்சமலை கோரையாறு அருவிக்குச் செல்லும் வழியிலுள்ள நீரோடை மீது இரும்பு நடைபாலம் அமைக்க வேண்டும் என ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘உங்கள் குரலில்' கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டியைச் சேர்ந்த வாசகர் சரவணன், ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதியில் கூறியது: பச்சமலையிலுள்ள கோரையாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஒற்றையடிப் பாதை மட்டுமே உள்ளது. அதுவும் பல இடங்களில் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. இப்பாதையின் நடுவே சற்று அகலமான ஒரு ஓடை செல்கிறது.
இதில் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில், சுற்றுலாப் பயணிகளால் ஓடையை கடந்து செல்ல முடியாது. மீறி கடந்து செல்ல முயன்றால், தண்ணீர் இழுத்துச் சென்றுவிடும். அதேபோல கான்கிரீட் படிக்கட்டு வசதி இல்லாததால், சறுக்கலான பாதையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கல் ஏற்பட்டால், சுமார் 50 அடி ஆழத்துக்கு கீழே விழ வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் பச்சமலை கோரையாறு அருவிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
எனவே, கோவை மாவட்டத்திலுள்ள கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இரும்பினால் ஆன நடை மேம்பாலம் அமைத்துக் கொடுத்துள்ளதுபோல, இங்கும் அமைத்துக் கொடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக இதுதொடர்பாக தமிழக அரசுக்கும், வனத் துறைக்கும் கோரிக்கை விடுத்து வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சுற்றுலாத் துறையின் மூலம் நிதி பெற்று ஓடை மீது நடை மேம்பாலம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.