தமிழகம்

அதிமுக - திமுக இடையே ரகசிய ஒப்பந்தம்: முத்தரசன் பேட்டி

செய்திப்பிரிவு

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்புகள் வெளியாவதன் பின்னணியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் உள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி:

தமிழக தேர்தல் பிரசாரத்திற்காக இடதுசாரி கட்சிகளின் தேசிய தலைவர்களான சுதாகர் ரெட்டி, ராஜா, யெச்சூரி, பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் வர உள்ளனர். அதேபோல், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும் வரவுள்ளார். தமிழகம் வரும் மோடி, தமிழக மக்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்திய பின்னர் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

விவசாயிகளை பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக மாற்றி அமைப்பது; ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவது; மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் மோடி விளக்க வேண்டும்.

திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் ஊழல் செய்வதில் ஒற்றுமை உள்ளது. இந்த இரு கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். திமுக, அதிமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் பழி வாங்கப்படுகின்றனர். இரு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே உள்ளது. மூன்றாவது முகம் தமிழகத்தில் தெரிந்து விடக்கூடாது என்பதில் இரு கட்சிகளுமே ஒற்றுமையாக உள்ளனர்.

இதனால்தான், தங்களுக்கு சாதகமான ஊடகங்களுக்கு பின்னால் இந்த இரு கட்சிகளும் இருந்துகொண்டு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கருத்துக் கணிப்புகளில் வெளியாகியுள்ள முடிவுகள், அதை வெளியிட்ட ஊடகங்களின் விருப்பம் தான். மக்களின் விருப்பம் அல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலர் கே.ஆர்.திருநாவுக்கரசு, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலர் விநாயகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT