திருநெல்வேலி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்துக்கு அரசு சார்பில் ரூ. 5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 21 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா சில தகவல்களைக் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கிஇதுவரை பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அரசு சார்பில் 21 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18 விசாரணைத் தலைவர்கள், 21 ஆணையங்களை நடத்தி உள்ளனர். 20 ஆணையங்களின் விசாரணை நிறைவடைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்துக்கு இதுவரை ரூ.3.60 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நிறைவடைந்துள்ளது. இதற்கு ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தகவல் தெரியவந்துள்ளது.