குறுவை சாகுபடி பணி குறித்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். படம்: ஆர்.வெங்கடேஷ் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் ரூ.12,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு; விவசாயி வீடு தேடிச் சென்று கடன் வழங்க திட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில்ரூ.12,000 கோடி பயிர்க் கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு வீடு தேடிச் சென்று கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியதாவது: டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.30 லட்சம் ஏக்கரில் குறுவைநெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டில் மேட்டூர் அணைமுன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால், 5.20 லட்சம் ஏக்கரில் குறுவைசாகுபடியும், 13.5 லட்சம் ஏக்கரில்சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ரூ.61கோடி மதிப்பிலான குறுவைதொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம்செயல்படுத்தவில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த ஆண்டு ரூ.12,000 கோடிக்கு மேல் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களில் அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, கடன் தொகையும் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடன்தொகையை கட்டினால் வட்டிஇல்லை என்பதால் கடன் தொகையும் திருப்பிச் செலுத்தப்பட்டு வருகிறது.

இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் போன்று, கூட்டுறவுத் துறை சார்பில் தகுதியான விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்களால் பல்வேறு புகார்கள் வருவதால், அவர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ்.கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம், கா.அண்ணாதுரை, பூண்டி கலைவாணன், நிவேதா எம்.முருகன், நாகை மாலி, பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் உழவர்நலத் துறை செயலர் சி.சமயமூர்த்தி, துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகதுணைவேந்தர் வெ.சீதாலட்சுமி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, கடலூர், அரியலூர்,திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவிவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை, கூட்டுறவு, உணவுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT