தமிழகம்

விலையில் உச்சம் தொட்டு சரிந்த தக்காளி; தொடர்ந்து விவசாயிகளை கண்ணீர் வடிக்க வைக்கும் வெங்காயம்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: தக்காளி விலை உச்சம் தொட்டு படிப்படியாக இறங்கி வருகிறது. ஆனால், வெங்காய விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து குறைந்தே இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், இடையகோட்டை, வேடசந்தூர், அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, வெங்காயம் சாகுபடி அதிகம் உள்ளது. தக்காளி, வெங்காயம் இரண்டுமே விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களாக உள்ளன.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியை விட அதிகம் பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பின. இதனால் மாவட்டத்தில் தக்காளி, வெங்காயம் பயிரிடும் பரப்பு அதிகரித்தது. இதனால் விளைச்சலும் அதிகரித்து, 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனர்.

இந்நிலையில் கோடைமழை எதிர்பார்த்ததைவிட அதிகம் பெய்யத் தொடங்கியதால் தக்காளி செடிகள் அழுகின. இதனால் வரத்து குறைந்து தேவை அதிகரித்து தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்றது.

வெங்காயம் விலையில் மாற்றமில்லை

ஆனால், வெங்காய பயிருக்கு கோடை மழையால் பாதிப்பில்லை. இதனால் வெளி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூ. 15-க்கு விற்றது. ஆனால் விவசாயிகளிடம் கிலோ ரூ. 10-க்கும் குறைவாகவே பெற்றனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.

தற்போது தக்காளி ஒரு கிலோ வெளிமார்க்கெட்டில் ரூ. 50-க்கு விற்பனையானது.

தக்காளி விலை உச்சம் தொட்டு தற்போது படிப்படியாக விலை குறைந்து நேற்று ஒரு கிலோ ரூ.50 க்கு விற்றது. மழை பாதிப்பு குறைந்து வருவதால் விளைச்சல் அதிகரித்து, மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், வெங்காயம் விலை குறைவு காரணமாக விவசாயிகள் பலரும் பட்டறை அமைத்து வெங்காயத்தை இருப்பு வைத்துள்ளனர். வெங்காயம் விலை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக ரூ.20 முதல் ரூ.25 -க்குள் முன்னும், பின்னும் சென்று வருகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

வெங்காயம் தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளதால் தற்போதைக்கு விலை உயர வாய்ப்பில்லை என்கின்றனர்.

இலங்கைக்கு ஏற்றுமதி இல்லை

திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், வெங்காயம் வெளியூருக்கு அனுப்புவது குறைந்து விட்டது.

குறிப்பாக, இலங்கைக்கு வெங்காயம் அதிகம் ஏற்றுமதி ஆன நிலையில், தற்போது பொருளாதார சரிவால் இலங்கை வெங்காயம் இறக்குமதி செய்யவில்லை. இதனால் அதிக அளவில் வெங்காயம் தேங்கியுள்ளது.

வரத்தும் அதிகரிப்பால் வெங்காய விலை ஏற்றமில்லாமல் தொடர்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு கிலோ ரூ.15 வரை விற்ற வெங்காயம் தற்போது ரூ. 25 வரை விற்கிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே விலைதான் இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT