தமிழகம்

திருச்சியில் நாளை ம.ந.கூட்டணி அரசியல் மாநாடு

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் மாறி மாறி தேர்வு செய்த மக்கள், மாற்று அரசியல் தேவை என எதிர்பார்த்தனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முயற்சியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ல் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவானது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 2-ம் தேதி குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் வளர்ச்சி பெற்றது. மக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக, தமாகா கட்சிகள் அணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

அவமதிப்புகள், அவதூறுகள், அதிகார அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை முறியடித்து வெற்றிப்படியின் உச்சம் தொட்டு நிற்பதை எடுத்துக்கூறும் வகையில் மக்கள் நலக் கூட்டணியின் வெற்றி மாநாடு, திருச்சியில் 11-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கூடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் மாநாட்டில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு ஆகியோர் பேசுகின்றனர். தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் இந்த மாநாட்டில் அணிதிரண்டு வருமாறு அனைத்து தரப்பினரையும் அழைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT