தமிழகம்

ஆலந்தூர் தொகுதியில் அனல்பறக்கும் பிரச்சாரம்: பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

ஆலந்தூர் தொகுதியில் புதிய மேம்பாலம், அரசு கல்லூரி, அரசு மருத்துவமனை கட்டுவோம் என தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 26 பேர் மனுவைத் தாக்கல் செய்தனர். இதில் 13 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் பண்ருட்டி ராமசந்திரன், திமுக சார்பில் தா.மோ.அன்பரசன் மற்றும் தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுதவிர, 5 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதற் கிடையே, கடந்த 20 நாட்களாக ஆலந்தூர் தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆளும்கட்சியாக வரும்போது அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதால் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

திட்டங்களுக்கு வரவேற்பு

அதிமுக வேட்பாளர் பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘‘அதிமுக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிமுக வெற்றி பெற்றால் ஆலந்தூர் தொகுதியை மேம்படுத்த பல்நோக்கு மருத்துவ மனை, பெண்களுக்கான புதிய கலைக்கல்லூரி, இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்க கைத்தொழில் மேம்பாட்டு நிறுவனம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்’’ என்றார்.

ஏரி தூர்வாரப்படும்

திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன், திமுக தேர்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார். அவர் கூறும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு இந்த தொகுதியில் எந்த விதமான நலத்திட்டப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திமுக வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் அடிப்படை பணிகள் மேம்படுத்தப்படும். ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரி, பல்வேறு அடிப்படை வசதிகளுடன் அருகே அழகிய பூங்கா அமைக்கப்படும்’’ என்றார்.

மேம்பாலம் கட்டப்படும்

மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் யு.சந்திரன் வாக்கு சேகரித்து பேசும்போது, ‘‘அதிமுக, திமுகவுக்கு மாற்றாக நல்ல ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். நல்லாட்சியை தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வழங்கும். மழைக் காலத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், இந்த பகுதியில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் பழவந்தாங்கலில் இருந்து ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

அரசு மருத்துவமனை

பாஜக வேட்பாளர் டாக்டர் சத்தியநாராயணன் பிரச்சாரம் செய்யும்போது, மழை வெள்ளத்தின்போது மத்திய அரசு உடனடியாக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்ததை கூறி வாக்கு சேகரித்தார். அவர் பேசும்போது, ‘‘திராவிடக் கட்சிகள் ஆட்சியில் மக்கள்நலத் திட்டங்களைவிட ஊழல்தான் அதிகரித்துள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால், ஆலந்தூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும்’’ என்றார்.

நீராதாரம் அதிகரிக்க

பாமக வேட்பாளர் சீனிவாசன் வாக்காளர்களிடம் பேசும்போது, ‘‘இந்த தொகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. சாலை வசதியும் இல்லை. எனவே, நாங்கள் வெற்றி பெறும்போது, ஆதம்பாக்கம், இரட்டை ஏரியை தூர்வாரி நீராதாரம் அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்’’என்றார்.

அடிப்படை வசதிகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.தனஞ்செயன், தேர்தல் அறிக்கையை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, ‘‘நாங்கள் இலவச கல்வியும், இலவச சுகாதாரமும் அளிப்போம். இந்த தொகுதியில் மோசமான சாலையும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் முதலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT