தமிழகம்

ஆணவம், அகங்காரத்துக்கு மே 16-ம் தேதி அடி விழும்: தா.பாண்டியன் உறுதி

செய்திப்பிரிவு

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில், திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவி (எ) சுப்பிரமணியத்தை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு எம்.எஸ்.நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது: தமிழகத் தில் 640 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பொறியியல் பட்டம் பெறுகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் வேலையில்லா பட்டதாரிகளாக இருக்கின்றனர். ஏற்கெனவே 110 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. நடப்பு ஆண்டில் 94 பொறி யியல் கல்லூரிகளை மூட முடிவு செய்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் மனித வளம் பாழடைந்துள்ளது. திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை பேர் வேலை இல்லாத இளைஞர்களாக இருக்கிறார்கள், எத்தனை பேர் வேலை பெற்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் பல் கலைக்கழகம், அரசுக் கல்லூரி களில் பேராசிரியர், விரிவுரையாளர் உட்பட 48 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதே போல், உயர்நிலைப் பள்ளிகளில் 50 ஆயிரம், தொடக்கப் பள்ளி களில் 1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதையெல்லாம் கேட்க வேண்டிய இடம் சட்டப்பேரவை. ஆனால், அங்கு மேஜையை தட்டுவதிலும், புகழ்பாடுவதிலும் பொழுதை போக்குகின்றனர்.

இந்நிலையில், ஆணவம், அகங்காரத்துக்கு வரும் 16-ம் தேதி அடி விழும். ஜனநாயகத்தை மதிக்காதவர்களுக்கு, மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT