விழுப்புரம்: மாநிலங்களவை உறுப்பினர் களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
10-ம் தேதி நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தலில் சார்பில் போட்டியிட்ட இருவரும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டுள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உளள அக்கட்சியினர் சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜூனன், சக்கரபாணி, அதிமுக நகர செயலாளர் பசுபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பன்னீர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்கள் சி.வி.சண்முகத்திற்கு மாலை அணிவித்தும், சால்வை அளித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் வாழ்த்து பெற்றார். இந்த மாநிலங்களைத் தேர்தலில் பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸிடம் வாழ்த்து பெற்றார்.