வாலாஜாப்பேட்டை: வாலாஜா அரசினர் மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு கல்லூரி தேர்வு எழுத அனுமதி அளிக்கக் கோரி கைக்குழந்தையுடன் மாணவி தர்ணாவில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த ஆயிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி (20). இவர், வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை தமிழ் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோதே காமாட்சிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு ஒரு மாதம் கைக்குழந்தையுடன் காமாட்சி கல்லூரிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த கல்லூரி பேராசிரியர்களுக்கு பச்சிளங் குழந்தையுடன் கல்லூரிக்கு வரவேண்டாம் என கூறியுள்ளனர். இதனால், கல்லூரிக்கு வராமல் காமாட்சி விடுப்பு எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையில், கல்லூரிக்கு போதிய வருகை இல்லாத காரணத்தால் காமாட்சியால் தேர்வு எழுத அனுமதி அளிக்கவில்லை. தேர்வுக்காக அவர் கட்டிய பணமும் திருப்பி வழங்கிவிட்டனர். தன்னால் கல்லூரிக்கு வர முடியாத காரணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை.
எனவே, இறுதியாண்டு தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் காமாட்சி நேற்று திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இந்த தகவலறிந்த வாலாஜா காவல் துறையினர் விரைந்து சென்று மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவியின் திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.