தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உடன் அதிகாரிகள். 
தமிழகம்

ரூ.216 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்: தாம்பரம் மாநகராட்சியில் இறையன்பு ஆய்வு

செய்திப்பிரிவு

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூர், பம்மல், சிட்லபாக்கம், சேலையூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் ரூ.215.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் ரூ.215 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. அனகாபுத்தூரில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிய தினசரி அங்காடி கட்டும் பணி, தரைப்பாலம் அருகே துணை கழிவுநீர் உந்து நிலையப் பணிகள், அதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம் மழைக்காலங்களில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மரம் நடும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், அடையாறு ஆற்றின் கரையோரம் மரக்கன்று நட்டா்ர். பின்னர் பம்மல் திருப்பனந்தாள் ஏரியை பார்வையிட்டு, அதனை தூர்வாருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல் சேலையூர், செம்பாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணி, பாதாள சாக்கடை திட்டப் பணி தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன், செங்கை மண்டல நகராட்சிகளின் செயற்பொறியாளர் கருப்பையா, தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் உதவி செயற்பொறியாளர் பெட்ஸி ஞானலதா, உதவி பொறியாளர் கோவிந்தராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT