தமிழகம்

அனைவருக்கும் இலவச பேருந்து பயணம்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: அனைவருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் “சென்னை தூய காற்று செயல் திட்டம்” வரைவு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி வரைவு அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, பசுமைத் தாயகம் அமைப்பு செயலர் இரா.அருள், இணைச் செயலர் ராதாகிருஷ்ணன், சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பாமக தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போராட்டம் நடத்தியுள்ளோம்.

எங்களைப் பார்த்துதான் பிற கட்சியினரும் மது ஒழிப்பை முன்னெடுத்துள்ளனர். அதேசமயம், பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

உலக அளவில் காற்று மாசால் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 11 ஆயிரம் பேர் இறக்கின்றனர். வாகன எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும், அரசு பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவதில்லை.

அனைவருக்கும் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசுப் பேருந்துகள் நவீனமாக இருந்தால் மக்கள் அதிகம் பயணிக்க தொடங்குவர். அதிக அளவில் பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால், வாகனப் பயன்பாடு குறையும். சாலை விபத்துகளும் குறையும்.

சென்னையில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்களை சந்தித்து, தூய காற்று செயல் திட்டத்துக்கான நகலைக் கொடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். அதேபோல, வீடுகள்தோறும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும்.

அனல் மின் நிலையங்களே அதிக காற்று மாசுவை ஏற்படுத்துகின்றன. அதற்கு அடுத்து வாகனங்கள். எனவே, பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

சென்னையைச் சுற்றி 50 கிலோமீட்டர் தொலைவுக்கு சுங்கச்சாவடிகள் இருக்க கூடாது. மின்சார வானங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். சாலைகள், மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைப்பதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகளை சாலைகளைச் சேதப்படுத்துகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இது தொடர்பாக தமிழக அரசு தனி விசாரணைக் குழுவை அமைத்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT