துறவியர் மாநாட்டையொட்டி மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள். 
தமிழகம்

இந்து தர்மத்தை பாதுகாக்க சபதம் எடுக்க வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை: இந்து தர்மத்தை பாதுகாக்க சபதம் எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் ப்ராண்டே பேசினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் துறவியர் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தரும புர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகித்தார்.

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலை வகித்து பேசியதாவது: தமிழ்நாட்டில் பண்பாடு, கலாச்சாரம் கோயில்களில் தான் உள்ளது. திராவிட அரசியல் பேசுபவர்கள் கோயில்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர்.

கோயிலுக்கு குத்தகை பாக்கி உள்ளது. கோயில் இடங்களில் கடை கள் வைத்திருப்பவர்கள் வாடகை கொடுப்பதில்லை. மதுரை ஆதீனத்துக் குட்பட்ட ஒவ்வொரு கோயிலிலும் ரூ.21 லட்சம் குத்தகை பாக்கி இருக்கிறது.

கிறிஸ்தவ, முஸ்லிம் புனித தலத்துக்கு செல்வதற்கு இலவசம் அறிவிக்கும் அரசு, இந்துக் கோயில்களில் மட்டுமே தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கின்றனர்.வரும் தேர்தலில் இந்துக்கள் கயிலாயம் செல்வதற்கு இலவசம் என்பவர்களுக்கே நமது ஓட்டு,

இவ்வாறு அவர் பேசினார்.

மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார ராமானுஜர் பேசியதாவது: தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுபவர்களுக்கு தக்க பாடம் கற்றுத்தரப்படும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் மதம் மாறியவர்கள்தான். அகண்ட பாரதம் உருவாக்குவோம், இந்து ராஷ்ட்டிரம் அமைத்தே தீருவோம். மதமாற்றம் ஒரு தேச அபாயம் என்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் ப்ராண்டே பேசியதாவது: தமிழகத்தில் பயங்கரமான சூழல் உள்ளது. இந்துக்கள் மாற்று சமுதாயத்தினரால் அழிக்கப்படுகின்றனர். இந்துக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து மதம் பரவியுள்ளது.

கம்யூனிஸ சித்தாந்தம் பேசுபவர்கள், நாத்திகர்கள் ஆகியோர் இந்து மதம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இங்கிருந்து ஆன்மிக வேண்டுகோள் விடுக்கிறேன், இந்து தர்மத்தை பாதுகாக்க சபதம் எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT