புரோட்டா தயாரிக்கும் மைதா மாவில் வேதிப்பொருள் கலப் படம் செய்யப்பட்டிருப்பதாக கூறப் படுவது குறித்து 3 மாதத் தில் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உணவுப் பொருள் பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வேதாரண்யம் தாலுகா தெற்கு தேத்தாக்குடியைச் சேர்ந்த கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘மைதாவில் பளீர் வெள்ளை நிறத்திற்காகவும், மிருதுவான தன்மைக்காகவும் அலாக்ஸான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படு கிறது. இந்த வேதிப்பொருள் உடல்நலத்திற்கு தீங்கு விளை விக்கக் கூடியது.
கோதுமையில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் அதில் உள்ள நார்ச்சத்தை அகற்றி, அதை பென்சாயிக் பெராக்ஸைடு அல்லது குளோரின் ஆக்ஸைடு மூலம் ப்ளீச் செய்யும்போது மைதா மாவு கிடைக்கிறது.
மைதா மாவின் விற்பனையை அதிகரிக்க அலாக்ஸான் என்ற இந்த வேதிப்பொருள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் இன்சுலின் சுரப்பதைக் கட்டுப்படுத்தி நீரழிவு நோயை ஏற்படுத்தும்.
மேலும் உணவுப் பொருளுடன் பென்சாயிக் பெராக்ஸைடு மற்றும் குளோரின் ஆக்ஸைடு போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்த அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் எவ்வித கட்டுப்பாடுமின்றி இந்த வேதிப்பொருட்கள் மைதாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கோதுமையில் உள்ள சத்துப் பொருட்களை அழித்து, மனிதர் களை மெல்லக் கொல்லும் விஷ மாகவே இந்த வேதிப்பொருட்கள் உள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த மார்ச் 14-ம் தேதி அனுப்பி வைத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, ‘‘மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே இதுகுறித்து உணவுப் பொருள் பாதுகாப்பு ஆணையர் 3 மாதங்களுக்குள் விசாரித்து, கலப்படம் செய்யப்பட்டிருப்பது உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.