ஏ.புதுப்பட்டி கிராமத்தில் குடும்ப விழா கொண்டாடிய இஸ்லாமியர். 
தமிழகம்

சாத்தூர் அருகே விளையாட்டுப் போட்டி, பெண் பார்க்கும் படலத்துடன் குடும்ப விழா கொண்டாடிய இஸ்லாமியர்

இ.மணிகண்டன்

சாத்தூர்: சாத்தூர் அருகே விளையாட்டுப் போட்டிகள், பெண் பார்க்கும் படலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் என இஸ்லாமியர் கொண்டாடிய குடும்ப விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சாத்தூரை அடுத்த இருக்கன்குடி அருகே உள்ளது ஏ.புதுப்பட்டி. இங்கு 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவ்வூரை பூர்வீகமாகக் கொண்ட பலர் கல்வி, வேலை நிமித்தமாக வெளிமாவட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், ஆண்டுதோறும் ஏ.புதுப்பட்டி இஸ்லாமியர் ஒன்றுகூடி குடும்ப உறவை புதுப்பித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா காரணமாக இவ்விழா நடக்கவில்லை. இந்த முறை, 7-வது ஆண்டாக நேற்று முன்தினம் குடும்ப விழா நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள், பெண்கள், ஆண் களுக்கான பல்வேறு போட்டிகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2-ம் நாளாக நேற்றும் குலுக்கல் முறையில் பரிசு மற்றும் குடும்ப விழா நடந்தது.

இதில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி, படிப்பை தொடரச் செய்வது, வேலையில்லாத இளைஞர் களுக்கு தங்களது நிறுவனங்கள் மற்றும் தாங்கள் சார்ந்த நிறுவனங் களில் பணி வாய்ப்பை ஏற்படுத்தி தருவது, மாப்பிள்ளை, பெண் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என நிகழ்ச்சிகள் நடந்தன.

இது குறித்து விழாக் குழுவினர் கூறுகையில், இவ்விழா சொந்த பந்தங்கள் கூடும் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதற்கான செலவு தொகை நன்கொடையாக திரட்டப்படுகிறது.

அசைவ விருந்து நேற்று நடைபெற்றது. மூத்தோர் அறிவுரை, ஆசிகளை வழங்கினர். மேலும், 10-வது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த முறை நடக்கும் விழாவில் பரிசு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT