தமிழகம்

மதுக்கடைகளை மூடாமல் தேர்தலை 100 சதவீதம் நியாயமாக நடத்த முடியாது: மக்கள் அதிகாரம் அமைப்பு கருத்து

செய்திப்பிரிவு

மதுக்கடைகளை மூடாமல் தேர்தலை 100 சதவீதம் நியாயமாக நடத்த முடியாது என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், திருச்சி மாவட்டப் பொறுப்பாளருமான தர்மராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை வரும் 4-ம் தேதிக்குள் மூட வலியுறுத்தி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியரிடம் மனு அளிப்பது என்று மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் முடிவு செய்தன.

அதன்படி, திருச்சியில் தர்மராஜ் தலைமையில் ஆதித் தமிழர் பேரவை, சமூகநீதிப் பேரவை, பெரியார் திராவிடர் கழகம், தேநீர் கடை வியாபாரிகள் சங்கம், புரட்சிகர அமைப்புகள், அன்பில், அரியூர், செங்கரையூர் பகுதி பொதுமக்கள் என 14 பெண்கள் உட்பட 40 பேர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று ஊர்வலமாக வந்தனர்.

அலுவலக பிரதான வாயிலுக்கு சற்றுமுன்பே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், 2 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று மனுவை பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லுமாறு அவர்களிடம் கூறினர்.

இதற்கு, தர்மராஜ், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சின்னதுரை, ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் அருந்ததி மைந்தன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் வராமல் அங்கிருந்து நகர மாட்டோம் என்றுகூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சற்று நேரத்துக்குப் பிறகு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பு, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரிடம் சென்று மனுவைக் கொடுக்குமாறு கேட்டார். அவர்களோ, தங்கள் கோரிக்கை குறித்து விளக்கத் தொடங்கினார். ஆனால், அதை பொருட்படுத்தாமல் மனுவை வாங்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல சுப்பு முயன்றதால், மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கை குறித்து தெரிவித்துவிட்டு அவரிடம் மனுவைக் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக தர்மராஜ் கூறும்போது, “மதுக்கடைகளை மூடாமல் தேர்தலை 100 சதவீதம் நியாயமாக நடத்த முடியாது. தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் தாராளமாக பணத்தையும், மதுவையும் கொடுப்பதால் கட்சித் தொண்டர்கள் உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடும் பலரும் தினமும் குடிக்கின்றனர்.

எனவே, சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மட்டுமின்றி, அரசு உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம், வாகனத் தணிக்கை, சோதனை, வீடியோ பதிவு, பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுப்பதுபோல, மதுக்கடைகளையும் வரும் 4-ம் தேதிக்குள் மூட வேண்டும்.

இல்லாவிட்டால், மே 5-ம் தேதி லால்குடி வட்டம் அன்பில், அரியூர், செங்கரையூர், திண்ணியம், நடராஜபுரம், படுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மக்களைத் திரட்டி நாங்களே மூடி, பிறருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்துவோம்” என்றார்.

SCROLL FOR NEXT