நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த ஆண்டு, தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸுக்கு உயர்ந்தது. வனங்களில் பசுமை குறைந்து, உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. உதகை, குன்னூர் உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகை, கேத்தி, குன்னூர், கட்டபெட்டு உட்பட பல பகுதிகளில் நேற்று மதியம் ஆலங்கட்டி மழை பெய்தது. கோத்தகிரி முதல் தொட்டபெட்டா வரை இடைவிடாது சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. குளிரான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.