தமிழகம்

80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம்: சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் கொடியேற்றுகிறார்

தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய், தேசியக் கொடியை ஏற்றி வைத்து இன்று (ஆக.15) உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

அதன்பின் ஆட்சி நிர்வாகம் சார்ந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றி வைத்து உரையாற்றுவதுடன், பல்வேறு விருதுகளையும் வழங்குகிறார்.

முன்னதாக, காலை 8.30 மணிக்கு கோட்டை கொத்தளம் அருகில் வரும் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வரவேற்று, காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைப்பார்.

அதன்பின், காவல்துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின், 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார்.

இந்நிகழ்வில் முதல்வர் விஜய்யின் குடும்பத்தினர், திரைப்பிரபலங் கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இருப்ப தாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம், சமூக சேவகர், கூட்டுறவு வங்கிக்கான விருதுகள், சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார்.

இதுதவிர, சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனுடன் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையின் ஒருபகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

‘தகைசால் தமிழர் விருது’

இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்பி.யுமான எம்.கிருஷ்ணசாமிக்கு தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விருதை, இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. எம்.கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் எம்பி.யாகவும், மகள் சவுமியா அன்புமணி, பாமக எம்எல்ஏவாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் தேநீர் விருந்து ரத்து

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய கொண்டாட்டத்தின் போது ஆளுங்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மாநில ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் அர்லேகர், கேரளாவுக்கும் ஆளுநராக செயல்பட்டு வருவதால் இன்று கேரளா செல்கிறார். எனவே சுதந்திர தின தேநீர் விருந்து நடைபெறாது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT