தமிழகம்

80-வது சுதந்திர தின விழா: சென்னை கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

அமைச்சர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்று, பொது மக்களுடன் உணவு அருந்தினர்.

ஆண்டுதோறும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, நாட்டின் நலம், அமைதி மற்றும் செழிப்புக்காக தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் அனை வரும் ஒன்றிணைந்து உண்ணும் பொது விருந்து நடைபெறும். அந்த வகையில், நேற்று நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டதையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30 முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த விழாக்களில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று, பொது விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர். அந்த வகையில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களு டன் அமர்ந்து உணவருந்தினர். வடபழநி முருகன் கோயிலில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு பரிமாறியதுடன் அவரும் உணவருந்தினார்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோயிலில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உணவுத் துறை அமைச்சர் பி.வெங்கட் ராமன், வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், சென்னை முழுவதும் உள்ள 30 கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொது விருந்தில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆட்சியில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இது மனசாட்சியுள்ள ஒரு மக்களாட்சியாக நடைபெற்று வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT