தாம்பரத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பரிசுகளை வென்றவர்களுடன் ஏர்மார்ஷல் மனவேந்த்ரா சிங் (நடுவில் அமர்ந்திருப்பவர்). உடன், பயிற்சி பள்ளியின் அதிகாரி ரத்தீஷ் குமார் மற்றும் விமானப் படை மையத்தின் அதிகாரி விபுல் சிங். 
தமிழகம்

தாம்பரம் விமானப் படை மையத்தில் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகளின் பயிற்சி அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு முப்படைகள், ஆயுதப் படை, துணை ராணுவப் படை மற்றும் உகாண்டா நாட்டு விமானப் படைவீரர்கள் என மொத்தம் 56 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இப்பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய விமானப் படை பயிற்சி மையத்தின் தலைவர் ஏர் மார்ஷல் மனவேந்த்ரா சிங் பங்கேற்று, பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

22 வாரம் நடைபெற்ற இப்பயிற்சியில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கியதற்காக சரீன் என்ற பயிற்சி அதிகாரிக்கு மஜிதியா கோப்பை வழங்கப்பட்டது. விமானப் படை தளபதி கோப்பை விருது சரீன், அங்கிட் அகர்வாலுக்கும், கமோடோா் கமாண்டன்ட் கோப்பை கெலாட்டுக்கும், தில்பாக் கோப்பை அக்ரவால், கிரனுக்கும், ஏர் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீப் கோப்பை அர்ஷத் அப்பாஸ், சரீனுக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய ஏர் மார்ஷல் மனவேந்த்ரா சிங், “பயிற்சி முடித்து பணியில் சேர உள்ள அனைவரும் தங்கள் துறையில் சிறந்து விளங்குவதோடு, அத்துறையில் தேவைப்படும் தரத்துக்கு ஏற்ப பணிபுரிய வேண்டும். அத்துடன், வருங்கால இளைஞர்களுக்கு நீங்கள் அனைவரும் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும். அதற்கேற்ற வகையில் தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணிபுரிய வேண்டும்” என்றார். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT