தமிழகம்

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனி வேல் (65) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல் 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து கட்சியில் உள்ளார். இவர் 2001-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடல்நலக் குறைவால் கடந்த 10 ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

இந்நிலையில், இந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதய நோயாளியான அவர் மருத்துவரின் ஆலோசனையையும் மீறி கடந்த ஒரு மாதமாக தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு, இதய நோயுடன் பக்கவாதம் ஏற்பட்டதால் சொக்கி குளத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தினர் கூறியதாவது: அறுவை சிகிச்சைக்கு பிறகு சீனிவேல் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை. தொடர்ந்து செயற்கை சுவாசத்துடன் தீவிர கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றனர். அவரது உறவினர் மனோ கரன் கூறும்போது, சீனிவேல் உடல் நிலை குறித்து தவறான தகவலை பரப்புகின்றனர். அவர் உடல்நிலை தேறி வருகிறார் என்றார்.

SCROLL FOR NEXT