சென்னை: நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்திய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று பொதுத்துறை மற்றும் பொது சேவைக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை மற்றும் பொது சேவைக்கான மக்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கறி உற்பத்திக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம்கோடியை மத்திய அரசு எடுத்து வேறுபயன்பாட்டுக்கு செலவிட்டுள்ளது. தவிர, உரத் தொழிற்சாலையில் நிதியை முதலீடு செய்யுமாறு கோல்இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது.
மேலும் இந்த நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக முக்கிய பதவியான தலைவர் மற்றம் மேலாண் இயக்குநர் பதவியை நிரப்புவதில்லை. நிலக்கரி சுரங்க மேலாளர்கள் தூய்மை இந்தியா இயக்கப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்படுகின்றனர். இதனால் நிலக்கரி சுரங்கப் பணி தொய்வடைகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் உள்ள நிலையில், மின்சாரம் மற்றும் நிலக்கரி தேவையை முன்கூட்டியே அறிந்து, தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொண்டுபோய் சேர்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு அனுமானிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இப்பொறுப்பை நிறைவேற்றுவதில், மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்கடியில் இந்தியாவை தள்ளியுள்ளது. இந்நிறுவனத்தின் நிதியும், அலுவலர்களும் மடைமாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால் 11 சதவீதம் உற்பத்தி அதிகரித்திருக்கும். இப்போது இருக்கக்கூடிய நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்கடிக்கு முழுக்க முழுக்க மத்திய அரசின் தவறான முடிவுகளே காரணம்.
இந்த சூழலில், தங்களுக்கு ஆதரவான நிறுவனத்தின் வெளிநாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். இப்போது மாநில அரசுகள் கட்டாயமாக மாதம்தோறும் அவர்களின் தேவையில் 10 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்துஇறக்குமதி செய்துகொள்ள வேண்டும்என்று மத்திய அரசு நிர்பந்தித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.