சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது.
எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது.
நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.