தாம்பரம்: தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் லட்சுமி, சிட்லபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மகுடீஸ்வரி ஆகியோர் வழக்கு சம்பந்தமாக காவல் நிலையம் செல்லும் வழக்கறிஞர்களை மதிக்காமல் தரக்குறைவாக தொடர்ந்து பேசுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், வழக்கறிஞர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ஆய்வாளர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற வளாகத்தின் முன்பு தாம்பரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரங்கராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் திடீரென நீதிமன்ற முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பல்லாவரம், தாம்பரம் இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.