திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே ராகவநாயுடு குப்பம் கிராமத்தில் 6 கோயில்களுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது ராகவநாயுடு குப்பம் கிராமம். இங்கு, பொதுமக்களால் புதிதாக கமல விநாயகர் கோயில், பொன்னியம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், சப்த கன்னியம்மன் கோயில், 20 அடி உயர பக்த ஆஞ்சநேயர் கோயில் என 5 கோயில்கள் அமைக்கும் பணி சமீபகாலமாக நடைபெற்று வந்தன.
மேலும், இக்கிராமத்தில் உள்ள பழமையான சீதாராமர் கோயில்புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, 6 கோயில்களுக்கும், கும்பாபிஷேக விழா நடத்த கோயில்களின் நிர்வாகங்கள் முடிவு செய்தன.
அந்த முடிவின்படி, மகா கும்பாபிஷேக விழா கடந்த மே 30-ம் தேதி காலை கோயில்களில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது.
தொடர்ந்து, நேற்று காலை பூர்ணாஹுதி நடைபெற்றது. பிறகு, பொன்னியம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கான புனித நீர்கலசங்கள் புறப்பாடு நடைபெற்று,கோபுர கலசங்களுக்கு மேளத்தாளங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சீதாராமர் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில், கட்சிகளின் பிரமுகர்கள், திருத்தணி, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.