தமிழக விவசாயிகளை சிறு, பெரு என பிரிக்காமல் அனைவரது விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மேட்டூர் அணையில் இருந்து காவிரி உபரி நீர் கடலுக்கு செல்வதால் அதை தடுத்து வறட்சியான புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டுவர காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பாண்டியாறு, புண்ணம்புழா திட்டத்தை நிறைவேற்றாமல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிரம்பும் பவானிசாகர் அணையை நம்பி அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை நிறைவேற்ற இயலாது.
விவசாயிகளை சிறு, பெரு என்று பிரிக்காமல், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தடையை மீறி கள் இறக்கியபோதும், கள் விற்றபோதும் எங்களை கைது செய்த காவல் துறை, எங்கள் மீது வழக்கு பதிவு செய்து வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றிருந்தால் எப்போதோ கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். தமிழகத்தில் படிப்படியான மதுவிலக்குதான் சாத்தியமானது என்றார்.
அமைச்சரிடம் மனு…
பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளர் செ.நல்லசாமி கரூரில் நேற்று மனு அளித்தார்.