சென்னை: ட்விட்டர் பதிவில் தான் பயன்படுத்திய "pariah" என்ற வார்த்தையின் பொருள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துப் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் "pariah" வார்த்தை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இழிவுபடுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் "pariah" வார்த்தையின் அர்த்தம் என்ன என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதில், "நான் ‘Pariah' எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன்.
அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள். இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது, உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!" என்று தெரிவித்துள்ளார்.