படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்தது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 80.81 சதவீத வாக்குகள் பதிவாயின. இது கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாரபூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி இன்று இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோரிடையே போட்டி நிலவியது.
தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். இதில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர்.
வாக்குப்பதிவு பணிக்காக 148 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். வாக்குச்சாவடிகளை 23 நுண்பார்வையாளர்கள் கண்காணித்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் பொருட்டு கடந்த இரு தினங்களாக தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள ஒஆர்எஸ் கரைசலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
31 வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கு முன்பாக முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி பதிவு நடத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப் பதிவு தொடங்கியது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலையிலேயே பலரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்காளர்களுக்கு கியூ கார்டுடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு தரப்பட்டு இருந்தது. தட்டாஞ்சாவடியில் உள்ள 31 வாக்குசாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் போலீஸார் சேர்ந்து 1,330 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இங்குள்ள மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பூத், வினோபாநகர் பொய்யாகுளம் கம்யூனிட்டி ஹால் அரங்கு ஆகிய பூத்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் தலா இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேரலை கண்காணிப்பு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு தொடர்பான புகார்களை, பொதுமக்கள் இணையவழி நேரலை கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. 6 மணிக்கு பிறகு வாக்குச்சாவடியில் யாரும் இல்லாததால் டோக்கன் ஏதும் தரப்பட்டு, வாக்குப்பதிவின் நேரம் பொதுத் தேர்தலைப் போல் நீட்டிக்கப்படவில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு மாலை 6.20 மணிக்கு குடும்பத்துடன் ஒருவர் வாக்களிக்க வந்தார். ஆனால், தேர்தல் பணிகள் நிறைவடைந்ததால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 19.2 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 39.16 சதவீத வாக்குகள் பதிவானது. மதியம் 1 மணி நிலவரப்படி 56.31 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 3 மணி நிலவரப்படி 68.91 சதவீத வாக்குகள் பதிவானது. 5 மணி நிலவரப்படி 78.83 சதவீத வாக்குகள் பதிவானது. இறுதியில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாயின.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் 87.1 சதவீத வாக்குகள் பதிவாயிருந்தது. கடந்த பொதுத்தேர்லைவிட இந்த இடைத்தேர்தலில் 6.29 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதிவான வாக்குகள் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தட்டாஞ்சாவடி தொகுதியில் படித்த இளைஞர்கள் மட்டுமில்லாமல் பலரும் வெளியூரில் பணிபுரிகின்றனர். அவர்கள் இந்த இடைத்தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறையில் வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால் அவர்கள் வருவதை தவிர்த்து விட்டது இந்த வாக்குப்பதிவு சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர்.