சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சாவடி நுழைவுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்குகிறது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தேர்தல் ஆணைய உத்தரவுப் படி வாக்காளர்களுக்கு வியாழக்கிழமை (நாளை) முதல் வாக்குச் சாவடி நுழைவுச் சீட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த நுழைவுச் சீட்டுகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கப்படும். அதை பெறும் வாக்காளர்கள், பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அளிக்க வேண்டும்.
நுழைவுச் சீட்டு வழங்குவது தொடர்பாக அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, அதன்படி விநியோகிக்கப்பட உள்ளது. அந்த கால அட்டவணை, அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் தெரிவிக்கப்படும்.
நுழைவுச்சீட்டு வழங்கும் பணியை அரசியல் கட்சி முகவர்கள் பார்வையிடலாம். அப்பணிகளை மேல்நிலை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். அப்பணி தொடர்பான புகார்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். அப்பணிக்கான சேவை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட உள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.