90 வயதைக் கடந்த கருணாநிதிக்கு சக்தி கொடுப்பதன் மூலம் யாருக்கும் பலன் ஏற்படப் போவதில்லை என தருமபுரி பிரச்சாரக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
தருமபுரி சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் பு.தா.இளங்கோவனை ஆதரித்து தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் நேற்று மாலை நாஞ்சில் சம்பத் வேன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
பாமக- தொடங்கப்படவும், அக் கட்சியின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தவர் பு.தா.இளங்கோவன். இன்று அவர் அக்கட்சியை உதறிவிட்டு ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்துள்ளார். அவரது நிழலை நாடி வரும் அனைவருக்கும் அடைக்கலம் தருபவர் தான் ஜெயலலிதா.
நடக்க உள்ள தேர்தலுக்காக பல முதல்வர்கள் உருவாகி இருக்கிறார்கள். 94 வயதைக் கடந்து விட்ட கருணாநிதி தான் சக்தி இழந்திருப்பதாகவும், தனக்கு தமிழக மக்கள் சக்தி வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவருக்கு சக்தி வழங்குவதன் மூலம் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலேயே யார் முதல்வர் என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி மத்திய அரசுகளில் அங்கம் வகித்திருந்தபோது தமிழக நலனுக்கு பதிலாக சுய நலனுடனே செயல்பட்டார். அதனால் தான் கச்சத் தீவை இழந்தோம். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2006-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாறாமல் இருந்திருந்தால் இலங்கை தமிழர்களை ஜெயலலிதா காப்பாற்றியிருப்பார்.
ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டது. அவர் மீண்டும் முதல்வராக தருமபுரி தொகுதியில் பு.தா.இளங்கோவனுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு பேசினார்.