தமிழகம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பணிகள் முடிந்தும் மின் இணைப்பு தாமதத்தால் பயன்பாட்டுக்கு வராத பல அடுக்கு வாகன நிறுத்தகம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

கோவை மாநகரின் பிரதான சாலைகளில் அதிகரித்துவரும் வாகன ‘பார்க்கிங்’ பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் மற்றும் கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ‘பல அடுக்கு வாகன நிறுத்தகம் (மல்டி லெவல் பார்க்கிங்)' திட்டத்தை கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதில், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் 1,990 இருசக்கரம், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் ரூ.69.80 கோடி மதிப்பீட்டிலும், டவுன்ஹால் பெரியகடை வீதியில் 1,341 இருசக்கரம், 483 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் ரூ.28.84 கோடி மதிப்பீட்டிலும், கிராஸ்கட் சாலையில் 1,466 இருசக்கரம், 847 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 5 தளங்களுடன் ரூ.32.33 கோடி மதிப்பீட்டிலும் பல அடுக்கு வாகன நிறுத்தகங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

பிறகு நிதிப் பற்றாக்குறை காரணமாக திட்டவடிவம் மாற்றப்பட்டு, ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் மட்டும் முதற்கட்டமாக ரூ.42 கோடி மதிப்பீட்டில் 4.5 ஏக்கர் பரப்பளவில் பல அடுக்கு வாகனம் நிறுத்தகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் தொடங்கின. கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்ற நிலையில், இத்திட்டத்தின் பணிகள் மந்த நிலையில் இருந்தன. அதற்கு பிறகு பணிகள் வேகமெடுத்து, கட்டுமான பணிகள் அனைத்தும் தற்போது நிறைவு பெற்று விட்டன. கார்களை ஏற்றி, இறக்க பயன்படும் ‘ஹைட்ராலிக்’ இயந்திர தொழில்நுட்பங்களை நிறுவுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன. தற்காலிகமாக அவ்வப்போது சோதனை ஓட்டம் மட்டும் இந்த பல அடுக்கு வாகன நிறுத்தகத்தில் நடைபெற்று வருகிறது.

வாகன நிறுத்தகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து, மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளாவிடம் கேட்டபோது, “பல அடுக்கு வாகன நிறுத்தக பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன. இன்னும் மின் இணைப்பு கிடைக்கப்பெறவில்லை. மின் இணைப்பு வந்து விட்டால் பயன்பாட்டுக்கு வந்துவிடும். திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்து கோப்புகள் தொடர்புடைய துறைகள் வசம் உள்ளன. அனுமதி தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். விரைவில் கிடைத்துவிடும்” என்றார்.

SCROLL FOR NEXT