கடலூர் மாநகராட்சி அதிகாரிகளால் மினிலாரியில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள். 
தமிழகம்

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப் பட்ட 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவதை தடுக்கும் விதமாக, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்றவற்றில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கடலூர் மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மேற்பார்வையில், மாநகராட்சி நகர் அலுவலர் டாக்டர் அரவிந்த ஜோதி தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள், கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மினி லாரி ஒன்று வந்தது. அதனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மினி லாரியையும் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், புதுச்சேரியில் இருந்து பார்சல் வண்டிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது எனத் தெரியவந்தது. இதில், 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அனுப்பி வைத்தது யார் என்பது குறித்து கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT