சென்னை: முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல, விகிதாச்சார அடிப்படையில் வரி வருவாயை பகிர்ந்து கொண்டால், நாட்டில் 5 மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலமும் வளர்ச்சி அடையாது. வாழ்வோம், வாழவைப்போம் என்ற தமிழர் பண்பாட்டை முதல்வர் உணர வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 9 சதவீதம், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 6 சதவீதம், மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம், ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம், கார் ஏற்றுமதியில் 32.5 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே என்று, பிரதமர் பங்கேற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
உள்நாட்டு உற்பத்தியையும், வரி வருவாயையும் ஒப்பிட்டு பேசுவதே தவறானது. பல புள்ளிவிவரங்களை குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், விவசாய உற்பத்தியில் முதல் 10 மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பதை குறிப்பிடாதது ஏன்?
நாட்டின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், 5 மாநிலங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.6 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. 8 வடகிழக்கு மாநிலங்களின் பங்கீடு 2.8 சதவீதம் மட்டுமே. விகிதாச்சார அடிப்படையில் வரி வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையாது என்பது கண்கூடு.
இந்தியாவுக்கு தேவை வளர்ச்சிதானே தவிர, வீக்கம் அல்ல. வாழ்வோம், வாழ வைப்போம் என்பதே தமிழர் பண்பாடு. இதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.