கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதை 50 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். நிறைவு நாளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
கொடைக்கானலில் கரோனா கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி கோடைவிழா, மலர் கண்காட்சி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த திரு வள்ளுவர் உருவம், டைனோசர், ஸ்பைடர்மேன், சின்சாங் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
மலர் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக் காணப்பட்டது. மலர் கண்காட்சியை 50 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர் எனத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலர் கண்காட்சி நடைபெற்ற நாட்களில் தினமும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணி களைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பாரம்பரியக் கலைகள் இடம் பெற்றன.
மலர் கண்காட்சி நிறைவு நாளான நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல் பகுதிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. அவ்வப்போது சாரல் பெய்தது. மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையில் கோடை விழா ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.