ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 3 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட சிலம்ப ஆசிரியர்கள் நலச் சங்கம், கலாம் உலக சாதனை புத்தக நிறுவனம் ஆகியவை இணைந்து, மாணவர்கள் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சியை செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் நடத்தின.
காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நகராட்சித் தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் கலைக் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, பள்ளி முதல்வர் விசாலாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
இந்நிகழ்வில் தனித்திறமையாக மாணவி கனிஷ்கா மரக்காலில் 10 கிலோ மீட்டர் நடந்து சிலம்பம் சுற்றியும், மாணவர் தனிஷ் கிரிஷ் கண்களை கட்டிக்கொண்டு 2 மணிநேரம் இரட்டை கம்பு சுற்றியும், மாணவர் முகம்மது ஆதிப் ஆணி மேல் நின்று 3 மணி நேரம் சிலம்பம் சுற்றியும் சாதனை புரிந்தனர்.
மாணவி பூர்விகா 1 மணி நேரம் தீப்பந்தம் சுற்றியும், மாணவர் பால ராஜேஸ்வரன் ஐஸ் கட்டி மேல் நின்று இரட்டை கம்பு 1 மணி நேரம் சுற்றியும், மாணவர் யோக தீபன் 6 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றியும், மாணவர் முகம்மது அப்துல் ஹாலித் மிதிவண்டியில் 2 மணி நேரம் ஒற்றை கம்பில் சிலம்பம் சுற்றியும், மாணவர் சிவ சித்தார்த் கண்களை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் ஒற்றை கம்பு சிலம்பம் சுற்றியும் உலக சாதனை படைத்தனர்.