தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி யில் மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆகின்றன. மாநிலங்கள் வரி வசூல் செய்வதை முற்றிலும் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
பத்திரிகையாளர்களின் உரிமை கள் பறிக்கப்பட்டு, உலகளாவிய அளவில் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா மிகவும் கீழான நிலைக்கு சென்றுள்ளது. இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு சீனா பெருமளவில் இந்திய பகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல் வழிபாட்டு இடங்கள் பாதுகாப்பு சட்டத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் செயல்பட்டு வருகிறது.
பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி அளித்து நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், இந்தியாவில் பல கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலைதான் உள்ளது. மோடி ஆட்சியில் மிகவும் பயனடைந்தவர்கள் அவரது நண்பர்களாக இருக்கக்கூடிய ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே. அனைத்து வியாபாரிகளும், வர்த்தக நிறுவனங்களும் அதானி, அம்பானி ஆதரவு கொள்கையால் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் ஏற்படுத்த வேண்டும்.
பிரதமர் என்ன செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்களோ அதைத்தான் தமிழக முதல்வர் பேசியுள்ளார். முதல்வரின் பேச்சு தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.