தமிழகம்

கோடை சீசன் முடியும் தறுவாயில் குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்: விடுதி கட்டணம் இரட்டிப்பாக வசூல்

எல்.மோகன்

கோடை விடுமுறை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கோடை சீசனை பயன்படுத்தி சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் கட்டணத்தை இரட்டிப்பாக வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கோடை சீசன் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் கன்னியாகுமரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களில் வெளி மாவட்டம், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியதால் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. தற்போது மழை நின்று வெயிலுடன் கூடிய இதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது. இதனால் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை, சிதறால் மலைக்கோயில், மாத்தூர் தொட்டி பாலம், முட்டம் கடற்கரை, ஆயிரங்கால் பொழிமுகம், சிற்றாறு அணை பகுதி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிமாக உள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது மழை இல்லாததால் இரு நாட்களாக அருவியில் மிதமாக தண்ணீர் விழுகிறது. இதனால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் குவிந்து வருகின்றனர்.

படகு சவாரி

கடலில் படகு சவாரி மேற்கொண்டு விவேகானந்தர் பாறைக்குசெல்வதற்கு கடந்த இரு நாட்களாக கூட்டம் அதிகமாக இருந்தது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு இல்லத்தில் இருந்து வெளியே விடுதிகள் அமைந்துள்ள தெரு வரை 150 மீட்டர் தூரத்துக்கு சுற்றுலா பயணிகள் காத்திருந்து பயணம் செய்தனர். நேற்று கடும் கடல் சீற்றம் காணப்பட்டதால் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு சேவை நடந்தது. 8 ஆயிரம் பேர் படகு சவாரி மேற்கொண்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

விடுதிகளில் அதிக கட்டணம்

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி யில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அறை கிடைக்காதவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கினர். சீஸனை பயன்படுத்தி கன்னியாகுமரி, திற்பரப்பு மற்றும் சிற்றாறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், தனியார் விருந்தினர் விடுதிகளில் கட்டணம் இரட்டிப்பாக வசூல் செய்வதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த சுரேஷ் மேனன் கூறும் போது, “இங்குள்ள தனியார் விடுதிகளில் 1,500 ரூபாய் வாடகை உள்ள அறைக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குகின்றனர். பெரும்பாலான விடுதிகளில் வரைமுறையின்றி கட்டணம் வசூல் செய்கின்றனர்.

இதைப்போல் எங்கள் உறவினர்கள் திற்பரப்பில் உள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். அங்கும் இரட்டிப்பு வாடகை வசூல் செய்கின்றனர். சுற்றுலா வருவோர் வேறு வழியின்றி அறை எடுத்து தங்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT