கடலூர் சுற்று வட்டாரப் பகுதியில் அடித்த கடும் சூறைக் காற்றில் சேதமான வாழை மரங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 26-ம் தேதி இரவு சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் கடலூர் அருகே உள்ள அன்னவல்லி, வெள்ளக்கரை, ராமபுரம், காரைக்காடு, வெள்ளப்பாக்கம், சேடபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. “இப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. ஏறக்குறைய 500 ஏக்கர் அளவிற்கு பாதிப்பு இருக்கும்” என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
முறிந்து விழுந்த வாழைமரங்களில் பெரும் பாலானவை இன்னும் இரு மாதங்களில் குலை தள்ள வேண்டிய பருவத்தில் இருந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்னர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் கடலூர் தோட்டக்கலை துணை இயக்குநர்(பொறுப்பு) அருண் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களுக்கு நேற்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இந்த பாதிப்பு குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் (பொறுப்பு) அருண் கூறுகையில், “பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிக்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அன்னவல்லியில் 75 ஹெக்டர், வெள்ளக்கரையில் 90 ஹெக்டர், ராமபுரத்தில் 60 ஹெக்டர், காரைகாட்டில் 30 ஹெக்டர், வெள்ளப்பாக்கத்தில் 5 ஹெக்டர், கடலூர் முதுநகர் பகுதியில் 20 ஹெக்டர், சேடப்பாளையத்தில் 3 ஹெக்டர் ஆக மொத்தம் 288 ஹேக்டர் பாதிக்கப்பட்டுள்ளது. 392 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மொத்தமாக 2385.24 ஹெக்டரில் வாழை பரியிடப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையினருடன் இணைந்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உரிய ஆவணங்களுடன் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.