தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே வீடுகளின்றி குடிசைகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வீடு வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனூர் ஊராட்சி இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தது. அந்த வீடுகளுக்கு இலவச திட்டமான ஒரு விளக்கு மின் இணைப்பையும் வழங்கியது. கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காணாமல் உள்ள இந்த பழங்குடியினத்தினர் வன சேகரிப்பு பொருட்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினர் வளர்ந்து மணம் முடித்து புதிய குடும்பங்களாக மாறிய நிலையில் அவர்களுக்கு வீடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதே பகுதியில் சிறுசிறு குடிசைகள் அமைத்து பாதுகாப்பற்ற நிலையிலும், மின் விளக்கு வசதி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலமாக தருமபுரி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின்போது சேதமடைந்த இந்த வீடுகளை சீரமைத்து அதிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
புதிய குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் இல்லை, சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளும் பொருளாதார சூழலும் இல்லை என்பதால் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அரசு திட்டங்கள் மூலம் பட்டா அல்லது வீடு கேட்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கூட சிலரிடம் இல்லாத நிலை உள்ளது. இதற்கிடையிலும் ஓரிரு முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் சிரமங்களை சகித்துக் கொண்டு குடிசைகளிலேயே வசிக்கின்றனர்.
அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கி மின்சார வசதியுடன் கூடிய வீடுகளை கட்டிக் கொடுத்து தங்களின் சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி பழங்குடியின மக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, அப்பகுதி மக்களின் நிலை மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு நடத்த பாலக்கோடு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.