ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி‌ பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். அருகில், சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர். 
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எலைட் உலக சாதனை: 3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி எலைட் உலக சாதனையுடன் மேலும் 3 புதிய சாதனைகள் படைக்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத நிலையை அடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 3 மணி நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி உலக சாதனை படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே, ஸ்விட்சர்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி எலைட் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதை முறியடிக்கும் வகையில் மாபெரும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் 2,500 சதுர கிலோ மீட்டர் பரப் பளவில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்கள், மகளிர் குழுவினர், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி
எலைட் உலக சாதனை படைக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன்,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்டோர்.

உலக சாதனை சான்றிதழ்

பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியில் மாவட்டத்தை 6 பகுதிகளாக பிரித்து அந்தந்த பகுதிகளில் தொழிற்சாலைகளின் பிளாஸ்டிக் கழிவுகள், நிறுவனங்களின் பிளாஸ்டிக் கழிவுகள், வீடுகளின் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், வெளியிடங்களில் இருந்த கழிவுகள் என நான்கு வகையாக பிரித்து சேகரிக்கப்பட்டன.

6 பகுதிகளில் உள்ள எடை மேடைகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளின் எடை சரிபார்க்கப் பட்டது. இதில், முந்தைய எலைட் உலக சாதனையை முறியடித்து 3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி புதிய சாதனை படைக்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் படைக்கப்பட்டுள்ள எலைட் உலக சாதனையை அங்கீகரித்து அதற் கான சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கினர்.

அதேபோல், ஏஷியன் ரெக் கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைக் கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இந்த உலக சாதனை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இந்த சாதனை இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்த்தப் பட்டுள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் அரியலூர் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். உலக சாதனை நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, உலக சாதனை திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT