தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. தமிழகம் முழுவதும் தற்போது 760 ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் ஈடுபட்டுள்ளன. சுமார் 3,500 பேர் இதில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேர வைத் தேர்தலில் தாங்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கடந்த 3 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியதாவது: 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு வேறு ஊர்களில் பணியாற்றி வருகிறோம்.
எங்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதி செய்து தரும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்தோம். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபற்றி சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடமும் முறையிட் டோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் யாருக்கும் விடுமுறை இல்லை என்று நிர்வாகம் சொல்லிவிட்டது. நாங்கள் வாக்களிக்க தயாராக இருந்தும் அதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து தரவில்லை. வரும் தேர்தலிலாவது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துத் தரவேண்டும் என்றார்.
இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், கோயம்புத்தூரில் பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தேர்தலின்போது அவர்கள் வாக்களிப்பது சிரமம். மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வாக்களித்துவிட்டு வரலாம்” என்றார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் தொடர்பாக பலர் கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டுபோட வசதியாக, அந்த தொகுதிக்கு அவர்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. தபால் ஓட்டு என்பது தேர்தல் ஆணையம், மத்திய அரசு, அமைச்சரவை முடிவு செய்ய வேண்டிய விஷயம்” என்றார்.