சென்னை / புதுடெல்லி: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கணிதப் பயன்பாடு, வரலாற்றுச் சின்னங்களை வரைபடத்தில் (மேப்) கண்டறிவது, கட்டுமான மாதிரிகளை அடையாளம் காண்பது, ஓர் அறிவியல் விதியை விளக்குவது ஆகியன தான் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் திறனாக அறியப்படுகிறது. ஆனால், தேசிய திறன் மேம்பாட்டு ஆய்வு (2021) அறிக்கையின்படி (National Achievement Survey) மேற்கூறிய திறன்களை வெளிப்படுத்துவதில் தேசிய சராசரியைவிட தமிழகத்தின் சராசரி மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 2021-ல் ஆன்லைனில் நடத்தப்பட்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தைத் தவிர்த்து மற்ற பாடங்களில் தமிழகத்தின் 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளது. 2017 ஆய்வுடன் ஒப்பிடும்போது 2021 ஆய்வில் தமிழக மாணவர்களின் திறன் குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் ரிப்போர்ட் கார்டை ஆய்வு செய்ததில் 2% மாணவர்களை அறிவியலில் சிறந்து விளங்குவது தெரியவந்துள்ளது. கணிதம், சமூக அறிவியலில் இந்த விகிதம் 8 ஆக உள்ளது. மீதமுள்ள மாணவர்களின் கற்றல் திறன் அடிப்படை, அல்லது அடிப்படை புரிதலுக்கும் குறைவு என்ற நிலையிலேயே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உபகரணங்கள் இல்லை: அதேபோல், 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் தமிழக மாணவர்களில் 26% முதல் 77% வரையிலானோருக்கு டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்தும் வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் கரோனா பெருந்தொற்று நேரத்தில் கற்றல் இடைவெளியில் சிக்கினார்கள் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. அந்த வேளையில் சில மாணவர்கள் படம் வரைதல், பாட்டு பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், விளையாடுதல் போன்ற கற்றலில் ஈடுபட்டதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-ஆம் வகுப்பை பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மேகாலயா மாநில மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளது.
8ஆம் வகுப்பை பொறுத்தவரை மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியாணா மாநில மாணவர்கள் சிறப்பான இடத்தில் உள்ளனர். அதேவேளையில் தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.
ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் மேற்கு வங்க பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அனைத்து வகுப்புகளிலுமே தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது.
இந்த ஆய்வில் பங்கேற்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.