தமிழகம்

தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் மத்திய அரசு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக வளர்ச்சிக்காக திட்டங்களை வகுத்து மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்காக, மாநில வளர்ச்சிக்காக பல துறைகளில் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும், தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை போன்ற பல துறைகளுக்கு புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர நோடி தொடங்கி வைப்பது மகிழ்ச்சிக்குரியது. ரூ.28 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதால் தமிழக மக்கள் பெரும் பயனடைவார்கள். தமிழ்நாடும் பொருளாதாரத்தில் மேம்படும்.

மேலும் ரூ.2 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதில் 75 கிமீ தொலைவுள்ள ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான ரயில் தடம் அமைக்கும் திட்டமும்,சென்னை தாம்பரம் -செங்கல்பட்டு இடையேயான 30 கிமீ தொலைவுக்கு ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை அமைக்கும் திட்டமும் அடங்கும். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேருவதோடு நாடும் வளம் பெறும்.

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. தமிழகம் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT